தேசியப்பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக கருதவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

தேசியப்பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக கருதவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

தேசியப்பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக நாம் கருதவில்லை. புரிந்துணர்வுடன் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும். தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க முடியாது என நான் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் புதன்கிழமை கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யதார்த்தத்தை உணர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம். அதேபோன்ற கட்சியின் வீழ்ச்சிக்கான குறைபாடுகளையும் அறிந்து அவற்றை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.

புதிய பயணமொன்றை விரைவில் ஆரம்பிப்போம். அடைந்துள்ள தோல்வி மற்றும் பின்னடைவை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

தேசியப்பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக நாம் கருதவில்லை. புரிந்துணர்வுடன் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு 11 மாதங்கள் சென்றன.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க முடியாது என நான் கூறவில்லை. கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக பேசி தீர்மானிப்போம். எமது கொள்கைகளுடன் இணங்குபவர்களை இணைத்துக் கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கே நாம் முன்னுரிமையளிப்போம்.

நாட்டின் தேவையை உணர்ந்து செயற்படாத குழுக்களை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அவர்களுடன் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட நாம் விரும்பவில்லை. ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் எமக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி கூறுகின்றோம். அவர்களது எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment