தெஹிவளை மவுண்ட்லவேனியா பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இனந்தெரியாத சிவப்பு சாயம் கலந்துள்ளமை குறித்து தெஹிவளையின் பொதுச் சுகாதார பரிசோதகர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
தெஹிவளை மவுண்டலவேனியாவிலிருந்து அத்திடியவில் உள்ள பறவைகள் சரணாலயத்தை நோக்கி செல்லும் கால்வாய்களில் சிவப்பு சாயம் கலந்துள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கால்வாயில் கருஞ்சிவப்பு நிறத்தில் நீர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கால்வாயக்குள் கைத்தொழில் கழிவுகளை வீசியிருக்கலாம் என சந்தேகம் வெளியாகியுள்ளது.
நவம்பர் ஐந்தாம் திகதி முதல் இந்த கலர் நீர் அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்குள் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தெஹிவளை மாநகர சபைக்கும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெஹிவளையில் உள்ள வீடொன்றிற்குள் இயங்கும் சிறிய தொழிற்சாலையிலிருந்தே இந்த சாயம் வெளியேறியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கடும் சீற்றம் வெளியிட்டு சூழலியாளர்களும் பொதுமக்களும், ஆபத்தான தொழிற்சாலை கழிவுகளை வீசுவது தொடர்பில் ஒழுங்குபடுத்தல் அமுலாக்கல் இன்மையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
பல்லுயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி செயற்படும் அமைப்பொன்று இவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளது.
இதன் விளைவுகளை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம், ஈகிள் லோக்சைட் பகுதி தற்போது மாசடைந்துள்ளது. குக்குள் சாயம் எனப்படும் சாயமே இதற்கு காரணம் இவை ஆபத்தற்றவை போல தோன்றலாம் ஆனால் கடல் உயிரினங்கள் நகர விலங்குகளிற்கு இவற்றால் ஆபத்து ஏற்படலாம் என அந்த அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment