பெரும்பான்மையை பெற்ற அனைத்து ஜனாதிபதிகளும் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டனர் : மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் டி.யூ. குணசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

பெரும்பான்மையை பெற்ற அனைத்து ஜனாதிபதிகளும் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டனர் : மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் டி.யூ. குணசேகர

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்ற அனைத்து ஜனாதிபதிகளும் எதேச்சதிகாரமாகவே செயற்பட்டு வந்துள்ளனர். அதனால் அநுரகுமார திஸாநாயக்கவும் அந்த நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு மக்கள் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சரும், சிறீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டி.யூ. குணசேகர தெரிவித்தார்.

சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்களின் ஆணையில் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கோருவது நியாயமான கோரிக்கையாகும்.

ஆனால் அந்த கட்சியில் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் இந்த தேர்தலில் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்குமாறு தெரிவித்து வருகின்றனர். நாட்டின் வரலாறு தெரியாதவர்களே இவ்வாறு கோரி வருகின்றனர்.

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ் ஆகியோர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சி செய்தனர்.

இவர்கள் அனைவரும் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு எதேச்சதிகாரமாகவே செயற்பட்டனர். அந்த நிலை அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஏற்படக்கூடாது.

மஹிந்த ராஜபக்ஷ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று 17 வருடங்கள் ஆட்சி செய்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எடுத்த நடவடிக்கை ஒன்றும் இல்லை.

கோத்தாபய ராஜபக்ஷ்வும் மக்கள் ஆணையை தன்னிச்சையாக பயன்படுத்தி, பல பிழையான தீர்மானங்களை எடுத்தார். அதனால் ஏற்பட்ட நெருக்கடியால் அவருக்கு ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜே.ஆர்.ஜயவர்தன ஆறில் ஐந்து அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டு, நாட்டில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் பிரதான காரணம் அல்ல. பொருளாதார மூலோபாய திட்டத்தின் தவறாகும்.

திறந்த பொருளாதார கொள்கை மூலமே பொருளாதாரம் நெருக்கடி நிலைக்கு செல்ல காரணமாகும். உற்பத்தி பொருளாதாரத்தை ஆரம்பிப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வாகும்.

அத்துடன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பதுடன் பலமான எதிர்க்கட்சியும் அமைய வேண்டும். அதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்.

ஜே.ஆர். பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை எடுத்தபோது பாராளுமன்றத்தில் நாங்கள் 9 பேரே இருந்தோம். அவ்வாறு இருந்தும் எந்த சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் அனுமதிக்க நாங்கள் இடமளிக்கவில்லை.

அதனால் அரசாங்கத்தின் காலை வாறும் எதிர்க்கட்சி அல்லாமல் வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்க மக்கள் சர்வஜன அதிகார கட்சிக்கு ஆணை வழங்க வேண்டும்.

அரசாங்கமும், எதிர்கட்சியின் உதவியை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை கொண்டு செல்ல தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment