10 ஆவது பாராளுமன்றின் முதலாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் : ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையும் இடம்பெறும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

10 ஆவது பாராளுமன்றின் முதலாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் : ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையும் இடம்பெறும்

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இன்று காலை 10.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

வழமைபோலன்றி இம்முறை ஆரம்ப நிகழ்வுகள் மிக எளிமையாக நடைபெறவுள்ளன.

இன்று முற்பகல் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்று, உறுதியுரைகளும் சத்தியப் பிரமாணங்களும் இடம்பெறும். 

இதையடுத்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி விசேட உரையாற்றுவார். இன்று முற்பகல் 9.55 மணிக்கு கோரம் மணி ஒலிக்கப்பட்டு, 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடும்.

படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்னவினால் சபா பீடத்துக்கு செங்கோல் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றம் கூடும் திகதி மற்றும் நேரம் உறுதிப்படுத்தப்படும். 

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சபையில் சமர்ப்பிப்பார்.

அதன் பின்னர் சபாநாயகர் தெரிவு நடைபெறுவதுடன் அரசியலமைப்பின் 64(1) சரத்து மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 4, 5 மற்றும் 6 நியதிகளின் படி, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான சத்தியப் பிரமாணம் அல்லது உறுதியுரை நடைபெறும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ உறுதியுரை மற்றும் சத்தியப் பிரமாணம் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி குழுக்களின் தலைவர் தெரிவுகள் நடைபெறும். 

முதலாவது தினமான இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட ஆசனங்கள் ஒதுக்கப்படாமல் விருப்பமான இடத்தில் அவர்கள் அமர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரம்ப நிகழ்வுகளையடுத்து தற்காலிகமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுடன் அரசியலமைப்பின் 32 (4) மற்றும் 33ஆவது சரத்துக்கு இணங்க முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபாபீடத்திலிருந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிப்பார்.

அதனையடுத்து ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இடம்பெறும். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பங்கேற்பதற்காக காலை 9.00 மணிக்கு சமுகமளிக்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் நடைபெறவள்ள இந்த ஆரம்ப நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை, 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வை மிக எளிமையான முறையில் நடத்துவதற்கு, ஜனாதிபதியின் ஆலோசனையின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

அதற்கிணங்க ஜெயமங்கள கீதம், முப்படைகளின் அணிவகுப்பு, மரியாதை பீரங்கி வேட்டுக்களை தீர்த்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். 

அதன்படி முற்பகல் 11.00 மணிக்கு அனைத்து அதிதிகளும் தமது ஆசனங்களில் அமர்வதுடன் 11.10 மணியளவில் பாராளுமன்றத்தின் பிரதான வாயில் பகுதியிலிருந்து சபாநாயகரை வரவேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் 11.15 மணியளவில் பிரதமரை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்று, ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வரவேற்கப்படுவார். 

11.20 மணியளவில் சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கவுள்ளனர்.

11.25 மணியளவில் ஜனாதிபதி சபாநாயகர், பிரதி சபாநாயகர் படைக்கல சேவிதர் புடைசூழ சபையில் பிரவேசிப்பார்.

சபா பீடத்தில் ஜனாதிபதி அமர்வதுடன் பாராளுமன்ற சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்துள்ள ஆசனத்தில் அமர்வார். 

அதனை அடுத்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படுவதுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment