ரணிலுடன் இணைந்தார் அப்துல்லாஹ் மஹ்ரூப் : ரிசாட், ஹக்கீம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 5, 2024

ரணிலுடன் இணைந்தார் அப்துல்லாஹ் மஹ்ரூப் : ரிசாட், ஹக்கீம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவால் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (04) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அப்துல்லாஹ் மஹ்ரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, ரணிலுடன் இணைந்துள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை இதன்போது ரணிலிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர், ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார். முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் இவரே. ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்டபோதும் கூட பாராளுமன்றில் குரல் கொடுத்தவர். எனவேதான் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ரிசாட், ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருக்கும்போது தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்தபோது ரிசாட் மறுத்தார். இதனால் அக்கட்சியிலிருந்து வெளியேறி ரணிலுடன் இணைந்தேன்.

சஜித் பிரேமதாசவால் ஆட்சிக்கு வர முடியாது. ஏனென்றால், 2019 இல் போட்டியின்போது ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் வாக்கும் அங்கு இருந்தது. மூன்று தேர்தல்களில் இரு ஜனாதிபதி பொதுத் தேர்தலிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வி கண்ட சஜித்துடன் இணைந்து ரிசாட் ஹக்கீம் சிறுபான்மையை எப்படி பாதுகாப்பது ஏமாற்றுகிறார்கள். பெரும்பான்மை ஆசனத்தை இம்முறை 113 ஐ இந்த அரசாங்கத்தால் பெற முடியாது.

எனவே, அநுரகுமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமர் ஆகலாம் என கூறினார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக சிலிண்டர் சின்னத்தில் ரணில் கூட்டணியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment