இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் வெளியானதாக தெரிவிக்கப்படும் 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தெடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு அறிக்கை வழங்கப்பட்டது.
அதற்கமைய பிரதமரினால் குறித்த அறிக்கையை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வியியலாளர்கள், கல்வி உளவியலாளர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், புள்ளிவிபரவியல் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு குறித்த குழுவே இவ்வாறு பரிந்துரை வழங்கியுள்ளது.
பரீட்சையை மீள நடாத்துவது 10 வயதேயான பிள்ளேகளின் மனநிலையை பாதிக்கும் என்பதாலும், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோருக்கு அசௌகரியம் ஏற்படும் என்பதாலும், அனைத்து மாணவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கும் வகையிலும் குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்றிருந்ததோடு, அதனைத் தொடர்ந்து குறித்த பரீட்சையில் வந்த 3 வினாக்கள் மாதிரி வினாக்களாக பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டமையும், அது பரீட்சைக்கு முதல் நாள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டமையும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment