நிவாரணங்கள், சம்பள உயர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் : சுட்டிக்காட்டியுள்ள TISL - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 27, 2024

நிவாரணங்கள், சம்பள உயர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் : சுட்டிக்காட்டியுள்ள TISL

2024 ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய நிவாரணங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களை தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி முதல் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து, 24 முதல் 35 சதவீத சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பொது சேவைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் வாக்காளர்கள். இது தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.

மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும், தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு உர மானியமும் ஆகஸ்ட் 22 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அண்மையில் ரூ. 1,700 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக வாக்குறுதியளிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான நிதியை எந்த வழியில் திரட்டப் போகிறது என்பதை அரசாங்கம் எங்கும் விளக்கவில்லை.

எவ்வாறாயினும், பொதுமக்கள் அல்லது பொது அதிகாரிகளுக்கான மானியங்கள், சம்பள உயர்வுகள் அல்லது நன்மைகளை வழங்குவதை எதிர்க்கவில்லை, மாறாக அவை செயல்படுத்தப்படும் நேரத்தை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்துகிறது.

தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஊக்குவிக்கவோ அல்லது தடுக்கவோ பொது வளங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று சட்டம் தெளிவுபடுத்துகிறது.

இந்த முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை வரை, பொது வளங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா சமர்ப்பித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலையீட்டினால் இவ்வாறான பல மீறல் செயற்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா பாராட்டுகிறது.

நாட்டின் ஒரு முக்கிய தருணமான ஜனாதிபதித் தேர்தலை அணுகும் போது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் 2394/56 சுற்றறிக்கைகள் / வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை தெளிவாக மீறுவதாகும்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடைமுறைகளைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கடுமையாக வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்வது, தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகும். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது, வேட்பாளர்களுக்கான சம வாய்ப்பை இழக்கும் அனைத்து செயல்களையும் கண்டிக்கிறது.

தேர்தல்களின் முக்கியமான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் பிரஜைகளுக்கு சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாக்களிக்கும் உரிமையை வழுவிப் போகச் செய்வதோடு அதன் மூலம் ஜனநாயக செயன்முறையை சிதைக்கின்றது.

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்வதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுக்கிறது.

No comments:

Post a Comment