அமைதியின்மை காரணமாக பங்களாதேஷ் பாராளுன்றம் கலைக்கப்பட்டது : முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமென வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2024

அமைதியின்மை காரணமாக பங்களாதேஷ் பாராளுன்றம் கலைக்கப்பட்டது : முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமென வலியுறுத்து

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் பதவி விலகிய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு சென்று 24 மணித்தியாலங்களுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதியால் அறிக்கை வௌியிடப்பட்டது. 

இன்று மாலை 3 மணிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்காவிட்டால் எதிர்ப்பு நடவடிக்கையை மேலும் கடுமையாக்குவதாக பங்களாதேஷ் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்திருந்த பின்னணியிலேயே ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய முப்படையின் பிரதானிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மாணவ செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார். 

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என கூறிய பங்களாதேஷ் இராணுவத் தளபதி தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்துபவர்கள் இராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று (05) மதியம் தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், அதற்காக இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பெலாரஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்பமாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment