போகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் வீட்டிற்கு அருகாமையில் ஓடும் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றதில் ஒரு குழந்தை நீரில் மூழ்கியதுடன், ஏனைய இருவரும் காணாமல் போயிருந்தனர்.
நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போன தாய் மற்றும் மற்றைய குழந்தையின் சடலங்கள் இன்று (26) அதிகாலை மீட்கப்பட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பாகமுவ பெரஹேனவத்த பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் காவலாளியாக பணியாற்றிய மேற்படி நபரின் மனைவியான 34 வயதான டொனா பியுமிகா மதுஷானி, அவர்களது 9 மற்றும் 5 வயதுகளுடைய, பஹன் பன்சிலு சம்பத், காலிங்க உதார பியூமால் சம்பத் ஆகிய இரு மகன்களுமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது 9 வயது மூத்த குழந்தையின் சடலம் நேற்று பிற்பகல் தெதுரு ஓயே கரையோரப் புதரில் சிக்கிய நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டதுடன் மற்றைய இருவரின் சடலங்கள் நேற்று (25) மாலை மற்றும் இன்று (26) காலை குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டுள்ளன. .
உயிரிழந்த விசேட தேவையுடையவரான மூத்த பிள்ளை இப்பாகமுவ ஆதர்ஷ மகா வித்தியாலயத்திலும், மற்றைய குழந்தை முன்பள்ளியிலும் கல்வி பயின்று வந்தனர்.
தாங்கள் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்தில் உள்ள கிணறு மாசடைந்தமையால் மூவரும் நேற்று காலை வழமை போன்று தாம் வசிக்கும் தோட்டத்திற்கு அருகாமையில் ஓடும் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையினால் தெதுரு ஓயாவில் ஏற்பட்டுள்ள அதிக நீரோட்டம் காரணமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரண விசாரணையில் சாட்சியம் அளித்த கணவரான 40 வயதான முத்துக்குட ஆராச்சிகே பிரேமச்சந்திர மேலும் தெரிவிக்கையில், “நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சுமார் ஒரு வருடமாகிறது. இதனால், இரண்டு குழந்தைகளும் இந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் சேர்த்தோம்.”
“நேற்று காலை பத்து மணியளவில் வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வருவதற்காக யகல்ல சந்திக்குச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது என் மனைவி, குழந்தைகளைக் காணவில்லை, அதனால் அவர்கள் குளிக்கச் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, தோட்டத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு அத்தை என்னிடம் வந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் உடைகள் ஆற்றின் கரையில் காணப்படுகின்றன. ஆனால் அவர்களை காணவில்லை எனத் தெரிவித்தார்.
“அந்தக் குளிக்கும் இடத்தில் நாங்களே குளிப்பதற்கு இடம் அமைத்துக் கொண்டதால், அவர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் பயந்து ஓடிச் சென்று ஓடையைச் சுற்றிப் பார்த்தேன். மூத்த மகன் கரையோரப் புதரில் சிக்கியிருப்பதைக் கண்டேன். உடனே அவரை தூக்கிப் பார்த்தேன் மூச்சு இருக்கவில்லை. அப்போது நான் கூச்சலிட்டேன். இந்தச் செய்தியைக் கேட்ட அருகில் உள்ளவர்கள் அங்கு கூடி மனைவியையும், மகனையும் தேட ஆரம்பித்தனர்.
“இந்த சம்பவத்தை அறிந்த எனது அண்ணனும் வந்து கிராம மக்களுடன் சேர்ந்து அவர்களைத் தேடினார். மாலையில் சிறிய மகனின் உடல் அதற்கு அருகிலேயே மீட்கப்பட்டது. இன்று காலை அதற்கு அருகிலேயே மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.”
“இந்த நாட்களில் இந்தப் பக்கம் மழை அதிகம் என்பதால் தெதுரு ஓயவில் நீர் மட்டம் அதிகமாகியுள்ளது. அதனால், இதில் குளிப்பது ஆபத்தானது. ஆனால் மனைவி குழந்தைகளுடன் வழக்கம் போல் குளிக்கச் சென்றிருக்கலாம். நான் வீட்டில் இருந்தால். நான் அவர்களை குளிக்க அனுமதித்திருக்கமாட்டேன்.” என்றார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
உயிரிழந்த மூவரின் இறுதிக் கிரியைகள் அலவ்வ பரமாவுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதோடு, போகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment