பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து என வெளியான செய்திகள் பொய் : இரண்டு மில்லியன் உரிமையாளர்களின் தகவல்களை புதுப்பிக்க புதிய முறை - போக்குவரத்து அமைச்சின் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2024

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து என வெளியான செய்திகள் பொய் : இரண்டு மில்லியன் உரிமையாளர்களின் தகவல்களை புதுப்பிக்க புதிய முறை - போக்குவரத்து அமைச்சின் செயலாளர்

புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார். 

இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான அனைத்துப் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1960 களில் இந்நாட்டின் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதிலிருந்து, சுமார் 12.3 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் ரூபசிங்க குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ‘’இந்த நாட்டில் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் 60 காலப்பகுதிகளில் வழங்கப்பட்டது. அதன் பிறகு, சுமார் 12.3 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 60 களில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு காலாவதி திகதி இல்லாததால், அந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காமல் பயன்படுத்தலாம். எனவே, சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை.

போக்குவரத்துத்துறை தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாரதிகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புள்ளிகள் குறைத்தல் முறைமை மற்றும் குறித்த இடத்திலேயே அபராதம் செலுத்துவதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

2025 ஜனவரி 01 முதல் இந்தப் புள்ளி குறைக்கும் புதிய முறை மற்றும் குறித்த இடத்திலேயே அபராதம் செலுத்துதல் உள்ளிட்ட புதிய வழிமுறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு அனைத்து சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் அவசியமாகும். 

அதன்படி, இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 02 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தகவல்களை புதிப்புக்க ஒரு பொறிமுறையை மிக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதற்காக புதிய மருத்துவ அறிக்கைகளைப் பெறவோ அல்லது மோட்டார் வாகனத் திணைக்களத்தற்கு வருகை தரவோ அவசியமில்லை.

புதிய முறைமையின் கீழ் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தகவல்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க எதிர்பார்க்கிறோம். அது தவிர, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது அல்லது ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படமாட்டாது. இது தொடர்பாக வெளியாகும் பிரச்சாரங்கள் முற்றிலும் தவறானவை என்பதைக் கூற வேண்டும். 

மேலும், இந்தப் புதுப்பிப்புகளைச் செய்த பிறகு, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-சாரதி அனுமதிப்பத்திரங்களை ( e-Driving license ) அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

இதேவேளை, கடந்த காலத்தில் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 08 இலட்சம் பேருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டியிருந்தது. அதில் இதுவரை 91,000 பேருக்கு மாத்திரமே அட்டை வழங்க வேண்டியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களுக்கும் அட்டைகளை வழங்க முடியும். அதில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 02 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் அட்டைகள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் வழமை போன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியும். 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment