எவ்வித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை இருப்பினும் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மை குறித்து சந்தேகம் உண்டு - கௌஷல்ய நவரத்ன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 21, 2024

எவ்வித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை இருப்பினும் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மை குறித்து சந்தேகம் உண்டு - கௌஷல்ய நவரத்ன

(நா.தனுஜா)

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதனால் வெகுவிரைவில் நடாத்தப்பட வேண்டியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன, இருப்பினும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் இச்சட்டமூலத்தை கொண்டுவருவதன் பின்னணியிலுள்ள நேர்மைத்தன்மை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது எதிர்வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எனும் சொற்பதத்துக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையிலேயே இத்திருத்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தேசிய தேர்தல்களை நடாத்த வேண்டியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசரம் எதுவும் இல்லை எனவும், மாறாக அவ்வாறு செய்வதால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியமா? எனவும், எதிர்வரும் வாரமளவில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதில் இடையூறுகள் ஏற்படக்கூடுமா? எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌஷல்ய நவரத்னவிடம் வினவியபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குறிப்பாக தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான சரத்துக்களும் தெளிவுபடுத்தல்களும் உள்ளடங்கியிருப்பதாகவும், அத்தகைய நிலைப்பாட்டிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், எனவே அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதால் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதில் எவ்வித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

'ஆனால் தேசிய தேர்தல்களை நடாத்த வேண்டியிருக்கும் சூழ்நிலையில், அதற்கு மத்தியில் அரசாங்கம் இத்திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பிப்பது நேர்மையான நகர்வு தானா? என பலரையும் போன்று நாமும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது' எனவும் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன கருத்து வெளியிட்டார்.

எது எவ்வாறிருப்பினும் இத்திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதன் தேவைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த தீர்மானம் உயர் நீதிமன்றத்தினாலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment