கோட்டாபய தப்பிச் செல்வதற்கு இலங்கை விமானப்படையே உதவியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

கோட்டாபய தப்பிச் செல்வதற்கு இலங்கை விமானப்படையே உதவியது

அரகலய நாட்களின்போது கோட்டாப யராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச் செல்வதற்கு இலங்கை விமானப் படையின் விமானமும் நிதியும் பயன்படுத்தப்பட்டமை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

அரகலய போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு தப்பிச் சென்றார்.

இலங்கை விமானப் படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார், திறைசேரி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்ட நிதி இதற்கு பயன்படுத்தப்பட்டது என இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கான செலவு குறித்து விமானப் படை எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஜனாதிபதியே நாட்டின் தலைவர் முப்படைகளின் தலைவர் என்பதால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஏற்பாட்டின்படி ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைவர் மிக முக்கிய பிரமுகர் என்பதற்குள் அடங்குவதால் ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை என இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விவகாரத்தின் இரகசிய தன்மை காரணமாக அனுமதி வழங்கப்பட்டமைக்கான ஆவணத்தை இலங்கை விமானப் படை பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளது.

No comments:

Post a Comment