இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் : சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தினார் ஆணைக்குழு தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2024

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் : சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தினார் ஆணைக்குழு தலைவர்

ஜூலை மாதம் இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக இன்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் என்பனவற்றுக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தடையேதும் கிடையாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் படி, இந்த தினங்களை எவரும் பரிசீலிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இந்த தேர்தலை நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment