(நா.தனுஜா)
மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்துகொள்வதற்கு செயற்திறன்மிக்க கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பது இன்றியமையாததாகும் என தெற்காசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றம் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெரிட்டே ரிசேர்ச் அமைப்பும், தலைமைத்துவம் மற்றும் அரச கொள்கைக்கான பண்டாரநாயக்க நிலையமும் இணைந்து 'இலங்கையின் மீட்சிக்கு அவசியமான பொறுப்புக்கூறல் : சகலரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வு' எனும் தலைப்பில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே பேராசிரியர் சாந்த தேவராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளியுறவுக் கொள்கையையும், வெளிநாட்டு முதலீடுகளையும் வேறு பிரித்துப் பார்ப்பதற்கு இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று அரசாங்கங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அவற்றைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கும் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்.
இருப்பினும் கடந்த 70 வருட காலமாக இதுவோர் குறைபாடாகக் காணப்படுவதுடன், அதுவே தற்போதைய நெருக்கடி ஏற்படுவதற்கும் வழிகோலியது. இருப்பினும் சர்வதேச பிணைமுறிகள் ஊடாக அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச் செய்ய முடியும் என்பதுடன், செயற்திறன்மிக்க இயங்குகையை காண்பிக்குமாறு கோரமுடியும்.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்கு 'திறந்த' வர்த்தக் கொள்கை அவசியம் என்பதுடன், 1979 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரேயே தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி அவதானிக்கப்பட்டது.
இருப்பினும் அக்காலப்பகுதியில் திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சந்தைக்கு தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் எனக்கூறி உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால் அதற்கு எதிர்மாறான விடயங்களே நடைபெற்றன.
ஏனெனில் முதலீட்டாளர்களின் உள்வருகை மூலம் இலங்கையின் சந்தைக்கான உற்பத்தித்திறன் பெருகியதுடன், வேலைவாய்ப்பின்மையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றளவிலே எமது அதியுச்ச முக்கிய ஏற்றுமதியாக ஆடை உற்பத்திகளே இருக்கின்றன.
அடுத்ததாக நாடளாவிய ரீதியில் 50 சதவீதமான விவசாயிகளின் பங்கேற்றைப் கொண்டிருக்கும் விவசாயத்துறை மிகக் குறைந்தளவிலான செயற்திறனையே வெளிக்காட்டுகின்றது. இதற்கு விவசாயத்துறை சார்ந்த கொள்கைகள், குறிப்பாக விவசாய நிலச்சட்டம் என்பன பெருமளவுக்கு அரசியல் நோக்கம் சார்ந்தவையாக இருப்பது முக்கிய காரணமாகும்.
எனவே விவசாயத்துறையின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு அவசியமான துரித நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும் கல்வி முறைமையிலும் அவசியமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் வறியவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வி முறைமை உருவாக்கப்பட்ட போதிலும், சமகாலத்தில் 60 சதவீதமான வறியவர்கள் பாடசாலைக் கல்வி முறைமையில் நிலவும் குறைபாடுகளின் காரணமாக தனியார் வகுப்புக்களுக்கென பெருந்தொகைப் பணத்தை செலவிடுகின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் அதேவேளை, பாடசாலைகளும் ஆசிரியர்களும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment