சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் - அமைச்சர் நலின் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும் - அமைச்சர் நலின் பெர்னாண்டோ

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நுகர்வோர் சட்டத்தை திருத்துவதற்கான உரிய பரிந்துரைககளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நலின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலின் பெர்னாண்டோ, “கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த நெருக்கடி காலத்தை தற்போது முடிவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது. அதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார். இந்த வெற்றியை அடைவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். அதன் வெற்றிகரமான பலனை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர்.

அத்துடன், கடந்த இரண்டு வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகவே மக்களுக்கு சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க முடிந்துள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தது. அத்துடன் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கி வட்டியை குறைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான கொள்கை ரீதியிலான முடிவுகளை மத்திய வங்கி எட்டியுள்ளது. அதன்படி, அடுத்த சில மாதங்களில் மக்களுக்கு மேலும் பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கும் என்று எமக்கு நம்பிக்கை உள்ளது.

மேலும், நுகர்வோர் சட்டத்தில் திருத்தம் செய்ய சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர் இடையே உள்ள புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, தற்போது வாரத்திற்கு ஒருமுறை 15 அத்தியாவசியப் பொருட்களின் விலையை அறிவித்து வருகின்றோம். ஆனால் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்காமை அவதானிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வர்த்தக சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். நாம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய நேரிடும் என்பதையும் கூற வேண்டும்” என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment