பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளை அந்தந்த பாடசாலைகளுக்கு வழங்க திட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2024

பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளை அந்தந்த பாடசாலைகளுக்கு வழங்க திட்டம்

இலங்கையில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளின் உரிமைகளைக் குறித்த பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் குறித்த ஒன்றியம் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம், பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்புப் பிரிவு, இலங்கை அரசாங்கப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், பொதுமக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளின் உரிமைகளைக் குறித்த பாடசாலைகளுக்கே பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றியத்தின் தலையீட்டைத் தொடர்ந்து முன்னேற்றம் கண்டிருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். 

இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகள், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தேவையான காணிகளின் அளவு, அவற்றுக்கு மேலதிக காணி தேவைப்பட்டால் அவை தொடர்பான விபரங்கள் உள்ளடங்களான தகவல்களை கல்வி அமைச்சும், மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து அடுத்த வாரத்துக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அந்தத் தகவல்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்தவும் இங்கு இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக் காணிகளை அளவிடும் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அதிகபட்சமாக 02 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை மாற்றி புதிய அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து ஒவ்வொரு பாடசாலைக்கும் தேவைக்கு ஏற்ப காணியின் அளவை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கடன் உதவியின் கீழ் இந்நாட்டில் பெருந்தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் பெற்றுக்கொடுப்பது மற்றும் இந்த உதவியின் கீழ் 800 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

மேலும், பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்கள் உயர்தரப் படிப்பைக் கற்கக்கூடிய பாடசாலைகள் இல்லாமை குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவத்துவல, அசோக் அபேசிங்க, ரோஹிணி விஜேரத்ன, வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment