இஸ்ரேல் பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

இஸ்ரேல் பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது - எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல் தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 354 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன,கண்டி, செங்கடகல, பாததும்பர, கடுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வு21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர், ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து விஷ வாயுகளை விசிறி படுகொலைகளை முன்னெடுத்தார். அன்று ஹிட்லர் செய்தது தவறு போலவே இன்று இஸ்ரேல் செய்து வருவதும் தவறாகும். இந்தத் தவறை தவறாக பார்க்க வேண்டும்.

இங்கு ஒரு நாடாக நாம் முதுகெலும்பை நிமிர்த்திக்கொண்டு தனித் தீர்மனாத்தை எடுத்து செயற்பட வேண்டும். பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் அரசும் அடுத்தடுத்து இரு நாடுகளாக ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடனும் நட்புடனும் வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். இதற்கு ஆதரவாக முன்நிற்பேன்.

யார் தவறு செய்தாலும் அதைத் தவறாகப்பார்க்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். பலஸ்தீன மக்களுக்காக நான் முன்நிற்பேன். பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐ.நா பொதுச்சபை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஒஸ்லோ மற்றும் ஜெனிவா ஒப்பந்தங்கள் பல காணப்படுகின்றன.

உலகத்தில் என்று இருந்தாலும் சரி, நமது நாட்டில் என்று இருந்தாலும் சரி, தீவிரவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது. நடுத்தர பாதையிலும் சரியான பாதையிலும் நாம் பயணிக்க வேண்டும். பலஸ்தீன மக்களின் மக்கள் சார் உரிமைகளுக்காகவும், அவர்களது தாயகத்தின் மீதான உரிமைகளுக்காகவும் நாடாக நாம் முன்நிற்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்துப் பிரஜைகளும் மதவாதம், மத பேதம், இனவாதம், இன பேதங்களை நிராகரித்து ஒரு தாயின் பிள்ளைகளாக நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நமது நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. கல்வியை கட்டியெழுப்ப அரசாங்க நிதி அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அரசாங்க நிதியை மட்டும் கொண்டு பாடசாலைகளைக் கட்டியெழுப்ப முடியாது.

எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு மட்டும் இதுவரை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளை கட்டியெழுப்ப விசேட திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் இலவசக் கல்வியை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment