எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், முறையற்ற வீடமைப்புக் கடன்களை வழங்கியதால், அரசாங்கத்திற்கு 5,564 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க அவரது காலத்தில் முறையற்ற வகையில் வழங்கப்பட்ட 53,709 பயனாளிகளின் கடன்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடன்களை இவ்வாறு மட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு 7,852 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மீதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த 2015 - 2019 காலப்பகுதியில், 07 வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மாதிரிக் கிராமம், விசிறி கடன் உதவி, சிறுநீரக நிதியுதவி, விரு சுமித்துரு உதவித் திட்டம்,கிராம சக்தி மற்றும் வெள்ள நிவாரண உதவித் திட்டம் போன்றவையே இந்த திட்டங்களாகும். இந்த முறையற்ற வீட்டுக் கடன்களில் பெரும்பாலானவை 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டில் உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற்றிருந்தன. 2019ஆம் ஆண்டில் 62,994 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதில் 40,500 வீடுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன் 2015 மற்றும் 2019 காலப் பகுதிகளில் அப்போதைய வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாச 3,41,510 வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளார், எனினும் 2,33,578 வீடுகளுக்கு மட்டுமே தேவையான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலையில் 107,932 வீடுகளுக்கு தவணைத் தொகையை வழங்க முடியவில்லை.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், புதிய வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் பணிகளை இடைநிறுத்திவிட்டு, முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பழைய வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அந்த வகையில் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் திட்டத்தில் தகுதியற்ற 53,709 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment