நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர்.
நெருப்பு மற்றும் புகை சூழ்ந்திருக்கும் விமானத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
காத்மாண்டு பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், தினேஷ் மைனலி, இந்த விபத்தில் சிக்கி 18 நபர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். ஒரு விமான ஓட்டி காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய விமான நிலைய பாதுகாப்பு தலைவர் அர்ஜூன் சாந்த் தகுரி, பராமரிப்பு பணிகளுக்காக 17 துறைசார் வல்லுநர்கள் மற்றும் 2 விமானிகளுடன் விமானம் போகராவுக்கு புறப்படட்டது என்று குறிப்பிட்டார்.
விமான பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக நேபாளத்தின் மீது அடிக்கடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் யேத்தி ஏர்லைனிஸில் பயணித்த 72 நபர்கள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணை முடிவில், விமானிகள் தவறுதலாக மின்சார இணைப்பை துண்டித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.
No comments:
Post a Comment