தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட முடியாது : உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட முடியாது : உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

தற்போது பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவரும் தேசபந்து தென்னகோன் அப்பதவியில் பணிகளைத் தொடர உயர் நீதிமன்றம் இன்று (24) இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை வழங்குமாறு கோரி, கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது

குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், குறித்த மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், சட்டத்திற்கு அமைய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை அறிவித்த, நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனு விசாரணையில் மனுதாரர்கள் மிகப்பாரிய வழக்கை நிறுவுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, இந்த மனு விசாரணைக்கு வரும்வரை, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும், தனது அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், கடமைகளைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

மனுக்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மனுக்களை எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் அண்மையில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் தெரிவிக்கையில், அரசியலமைப்பு பேரவையானது நிறைவேற்று அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சுயாதீனமான அமைப்பாகும் எனவும், அந்த அமைப்பின் தீர்மானங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்ய முடியாது எனவும் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

இதன்போது, ​​சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேவும், இந்த மனுக்களை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரினார்.

தேசபந்து தென்னகோனின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக சிபாரிசு செய்ததுடன், அதற்கு சட்ட ரீதியாக அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், செவிவழி மற்றும் ஆதாரமற்ற உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோனை குறித்த பதவியில் நியமித்திருப்பதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment