காஸா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல்களில் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி பலியாகிக் கிடந்த காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎப்) "அல்-ஜௌனி பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள கட்டமைப்புகளில் செயல்படும் பயங்கரவாதிகளைத்தான் தாக்கினோம்" என்று கூறியது.
இதற்கிடையில், முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுசேராத் பாடசாலை தாக்கப்பட்டது குறித்து வெளியான காணொளியில், இடிபாடுகளால் உண்டான புகை வீதி முழுவதும் நிறைந்திருக்க, பெரியவர்களும் குழந்தைகளும் அலறுவதைக் காட்டுகிறது. சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவ ஓடுகிறார்கள்.
பரபரப்பான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பாடசாலையின் மேல் தளத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 7,000 பேர் வரை இந்தக் கட்டடத்தைத் தங்குமிடமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய ஒரு பெண், கட்டடம் தாக்கப்பட்டபோது குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த சில குழந்தைகள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பதைத் தெரிவித்தார்.
"முன்னறிவிப்பின்றி பாடசாலையைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறை" என்று அவர் கூறினார்.
சனிக்கிழமையன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து உள்ளூர் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் 100 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஐந்து இறப்புகளையும் சேர்த்து, 158 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
'பாதுகாப்பற்ற, இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதான படுகொலை'
இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிட்ட அறிக்கையில், பாடசாலை கட்டடங்களைத் தாக்கியதை உறுதிப்படுத்தியது.
'துல்லியமான வான் வழிக் கண்காணிப்பு மற்றும் கூடுதல் உளவுத்துறையின் பயன்பாடு உட்பட பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயத்தைத் தணிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், இஸ்ரேலிய படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஹமாஸ் போராளிகள் அந்த இடத்தை மறைவிடமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும்' அது கூறியது.
"இஸ்ரேல் அரசுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிவிலியன் கட்டமைப்புகளையும் பொதுமக்களையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சர்வதேச சட்டத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறுவதாகவும்," இஸ்ரேல் ராணுவம் கூறியது.
ஹமாஸ் இந்தத் தாக்குதலை 'பாதுகாப்பற்ற, இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதான படுகொலை' என்று விவரித்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று ஹமாஸ் குழு தனது ஆங்கில டெலிகிராம் சேனல் மூலம் கூறியது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படலாம் என சமீபத்திய நாட்களில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
ஹமாஸுடன் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தை குழுவை அனுப்புவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி, போர் நிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டில் 'குறிப்பிடத்தக்க மாற்றங்களை' ஹமாஸ் ஒப்புக்கொண்டதை முன்னர் தெரிவித்திருந்தார்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நோக்கில் ஒரு ஒப்பந்தம் முன்மொழியப்பட்டு 16 நாட்கள் கடந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தங்கள் குழு ஒப்புக்கொண்டதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமையன்று ரொய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
ஏறக்குறைய எட்டு மாதங்களாக நீடித்துவரும் போரில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 17 இலட்சம் மக்களால் பல பாடசாலைகள் மற்றும் பிற ஐ.நா. கட்டமைப்புகள் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக ஜூன் மாதம் நுசேராத்தில் ஐ.நாவால் நடத்தப்படும் மற்றொரு பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.
பாடசாலையின் மேல் தளத்தில் உள்ள வகுப்பறைகள் மீது போர் விமானம் இரண்டு ஏவுகணைகளை வீசியதாக உள்ளூர் செய்தியாளர்கள் அப்போது தெரிவித்தனர்.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம், இந்தப் பாடசாலையில் உள்ள ஹமாஸ் வளாகத்தில் ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது. உள்ளே இருந்ததாக நம்பப்பட்ட 20 முதல் 30 போராளிகளில் பலரைக் கொன்றதாகவும் அது தெரிவித்தது.
பாடசாலையை நடத்தும், பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) தலைவர், ஜூன் சம்பவத்தை 'பயங்கரமானது' என்று விவரித்தார்.
"ஆயுதக் குழுக்கள் மக்களின் தங்குமிடத்திற்குள் இருந்திருக்கலாம் என்ற கூற்று அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார்.
இஸ்ரேலுடைய தாக்குதலின் விளைவாக காஸாவில் குறைந்தது 38,098 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment