ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை முன்வைப்பு : ஜூலை 15 இல் பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2024

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை முன்வைப்பு : ஜூலை 15 இல் பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில், சட்டமா அதிபர் இன்று (11) எழுத்து மூல ஆட்சேபனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

9 வருடங்களுக்கு முன்னர் தெமட்டகொடை பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றிய இளைஞர் ஒருவரை தமது டிபென்டர் வாகனத்தை பயன்படுத்தி தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் கடத்தி, தாக்குதல் மேற்கொண்டு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றத்துடன் தொடர்புடைய வழக்கில் 19 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்கு விதிக்கப்பட்ட 33 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 3 வருடன கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 3 1/2 இலட்சம் ரூபா அபராதத்தை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரையில் பிணை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு, மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி விஸ்வ விஜேசூரிய இது தொடர்பாக எழுத்து மூல ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

குறித்த தீர்ப்புக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வழக்கின் ஆரம்பத்திலேயே, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப் பாதுகாவலர்களாக செயற்பட்ட 8 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களுக்கு 12 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் ரூ. 165,000 அபராதமும் விதிக்கப்பட்டதோடு, கடத்தப்பட்ட இளைஞருக்கு 285,000 நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கின் 9 ஆவது பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர தான் நிரபராதி என்று கூறியதால், அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீண்ட விசாரணையின் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிரான 19 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான ஹிருணிகாவின் மனுவை எதிர்வரம் திங்கட்கிழமை (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment