முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 10, 2024

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (10) வெள்ளிக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டலின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் ஊடாக முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனைத்து தகவல்களையும் ஒரே பார்வையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் தலைமையில் அவரின் கரங்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், ஹஜ் கமிட்டி தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களும் வகுப் சபை உறுப்பினர்கள், ஹிந்து, கிறிஸ்தவ திணைக்கள உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நீண்டகால குறைபாடாகக் காணப்பட்ட இந்த இணையத்தளத்தை முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ. பைசல் அவர்களின் வழிகாட்டல் மற்றும் முயற்சியினால் பூரணப்படுத்த முடிந்தது. உதவிப் பணிப்பாளர்களான அலா அஹமட், என். நிலூபர், கணக்காளர் நிப்றாஸ் ஆகியோர் இதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தனர்.

இந்தப் புதிய இணையத்தளத்தின் மூலமாக பொதுவாக பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா சம்பந்தமான அனைத்து தகவல்கள் மற்றும் ஹஜ், உம்ரா சம்பந்தமான விடயங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக, பள்ளிவாசல் ஒன்றைப் பதிவு செய்வதற்குத் தேவையான என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விசா சம்பந்தமான தகவல்கள், அது தவிர இலங்கை வகுப் சபை சம்பந்தமான விபரங்கள், இலங்கை வகுப் நியாய சபை சம்பந்தமான தகவல்கள், ஹஜ் கமிட்டி சம்பந்தமான தகவல்கள் போன்றவற்றையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணையத்தளம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலதிகமாக புத்தசாசன மத விவகார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற அனைத்து திணைக்களங்களினதும் தகவல்களை இந்தப் புதிய இணையத்தளம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

அனைத்து திணைக்களத்தையும் கணினி மயப்படுத்தி, நவீனமயப்படுத்த வேண்டும் என்ற புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்தான் இதனை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்புதிய இணையத்தளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment