ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் ! பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ரணில் ! ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 19, 2024

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் ! பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ரணில் ! ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன.

இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடாத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்ற நிலையில், அந்த கட்சியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சந்திப்பு பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும்.

மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment