முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன் - பொன்சேக்கா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 21, 2024

முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன் - பொன்சேக்கா

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களைப் போன்றே, அன்று ஆட்சியிலிருந்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

சஹ்ரான் மாத்திரமின்ற அவருடன் தொடர்பினைப் பேணியவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்கள் அன்று நான் நாட்டில் இருக்கவில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். திட்டமிட்ட பின்னர் எவரும் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

யுத்த காலத்தில் கூட இவ்வாறான புலனாய்வு தகவல்கள் கிடைக்கவில்லை. தினம், நேரம், இடத்துடன் தகவல்கள் கிடைக்காது. ஆனால் இவ்வாறான தகவல்கள் கிடைத்தும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களுக்குக் கூட சிலர் வருகை தரவில்லை.

நாட்டின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் அந்த சந்தர்ப்பத்தில் ஒழிந்து கொண்டிருந்தார். இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இழப்பீடு செலுத்துவதால் மாத்திரம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைத்து விடாது. அவ்வாறெனில் இறுதி யுத்தத்தின்போது பிரபாகரனுக்கும் இழப்பீட்டு தொகையொன்றை அறிவித்திருக்க முடியுமல்லவா?

500 மில்லியன் இழப்பீட்டு தொகையை அறிவித்து பிரபாகரனை விடுதலை செய்துவிடுமாறு அறிவிக்க முடியாதல்லவா? நாட்டில் தற்போதுள்ள சட்டம் போதுமானது. எனவே இதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவேன் என்றார்.

No comments:

Post a Comment