ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 8, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்று (08) கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய உள்ளக நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சி அரசியல் குழுவைக் கூட்டியது. 

குறித்த சந்திப்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (04) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இருந்தபோதிலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க விரும்புவதாக சிறிசேனா பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து பல ‘முக்கியமான’ கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, மருதானை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (05) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் காரணமாக, கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசிப்பது சகல நபர்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை அறிந்திருப்பதாகவும், அவரிடம் விசாரித்தால் அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்தத் தகவல்களை நீதித்துறைக்கு வெளியிடத் தயார் என்றும் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும், கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, இது தொடர்பான தகவல்களை வெளியிட தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில், தகவல்களை இரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் கூறினார்.

No comments:

Post a Comment