'ஐந்தாண்டு கடந்தும் நிலைநாட்டப்படாத நீதி' : உயிர் நீத்தவர்களை 'விசுவாசத்தின் சாட்சிகள்' என பெயரிடக் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, April 22, 2024

'ஐந்தாண்டு கடந்தும் நிலைநாட்டப்படாத நீதி' : உயிர் நீத்தவர்களை 'விசுவாசத்தின் சாட்சிகள்' என பெயரிடக் கோரிக்கை

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினமான 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அடிப்படைவாதிகளால் கத்தோலிக்க தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலம் , நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் திருத்தலம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் என தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட இடங்களிலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 8.30 மணியளவில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாக, தாக்குதல்கள் மேற்கொள்ளபட்ட நேரமான 8.45 க்கு உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேவாலயங்களிலும் 8.45 க்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேராயர் உட்பட சர்வ மதத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களால் கொச்சிக்கடை திருத்தலத்தில் உள்ள நினைவு பலகைக்கு முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, மலர்மாலையும் சூட்டப்பட்டது.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களை 'விசுவாசத்தின் சாட்சிகளாக' பெயர் குறிப்பிடுவதற்கான கோரிக்கை பேராயரிடம் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் கலந்து கொண்டனர்.

அதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரெஞ்ச், ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, ஜப்பான், நெதர்லாந்து, பங்களாதேஷ், சுவிட்ஸர்லாந்து, துருக்கி, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் , இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக தூதுவர் ப்ரைன் உடைஹூவே ஆண்டகையும் கலந்து கொண்டிருந்தனர்.

புனித பாப்பரசரின் தூதுவர்
தொடர்ந்து இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக தூதுவர் ப்ரைன் உடைஹூவே ஆண்டகையினால் சிறப்புரையாற்றப்பட்டது.

இதன்போது 'வன்முறை வழியைப் பின்பற்றத்தூண்டி தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் இதயங்களில் அமைதி உணர்வை ஏற்படுத்த இறைவனை பிராத்திக்கின்றோம்' என்று ப்ரைன் உடைஹூவே ஆண்டகை குறிப்பிட்டார்.

அத்தோடு ஓமல்பே சோபித தேரர், ஸ்ரீ பொன்னம்பலவானேஷ்வரர் ஆலய தலைமை குருக்கள் சிவசுரேஷ் மற்றும் இஸ்லாமிய மத பரப்புரையாளர் ஷேக் அப்துல்லா அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோரும் இதன் போது உரையாற்றினர்.

விசேட ஆராதனைகள்
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்ததையடுத்து, குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசி கோரி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. இதில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட படுகாயமடைந்து அங்கவீனமுற்ற பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுவாப்பிட்டி திருத்தலம்
நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் திருத்தலத்திலும் துணைப் பேராயர்களின் தலைமையில் காலை 8.45 க்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. மாலை 3 மணிக்கு நீர்கொழும்பு, மேரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 3.30 க்கு மேரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் திருத்தலம் வரை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட ஆயர்கள், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் அமைதிப் பேரணியொன்றும் இடம்பெற்றது.

அதன் பின்னர், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களின் தலைமையில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் பிரார்த்தனை ஆராதனை நடைபெற்றது. இவ் ஆராதனை நிறைவடைந்ததன் பின்னரே தேவாலயங்களில் உயிரிழந்த பக்தர்களை 'விசுவாசத்தின் சாட்சிகள்' என்று பெயரிடுமாறு கோரி, கத்தோலிக்க பக்தர்கள் தங்கள் கையொப்ப நகல்களை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் ஒப்படைத்தனர்.

பலத்த பாதுகாப்பு
நேற்றையதினம் கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருத்தலத்திற்குள் பிரவேசித்த அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்தோடு , கொழும்பு - ஜம்பட்டா வீதி, செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணித்தியாலங்கள் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment