சர்வதேச பிணைமுறியாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, April 22, 2024

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு அரசுமுறை கடன்களுக்காகச் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும், கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக சீனாவைத் தவிர்த்து ஏனைய கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ குழு, இரண்டாவது சீனா, மூன்றாவதாக சர்வதேச பிணைமுறியாளர்கள் என்ற அடிப்படையில் இரு தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

சீனா உட்பட ஏனைய கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்களில் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டு தீர்மானம் எடுக்கப்பட்டாலும், சர்வதேச பிணைமுறியாளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

அண்மையில் லண்டனில் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பிணைமுறியாளர்கள் முன்வைத்த திட்ட யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் திட்ட யோசனைகளை சர்வதேச பிணைமுறியாளர்கள் ஏற்க தயாரில்லை.

கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் சர்வதேச பிணைமுறியாளர்கள் தாமத கட்டணத்துக்கான வட்டியை எதிர்வார்த்துள்ளார்கள். 2023.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,678 மில்லியன் டொலர் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

வங்குரோத்து அடைந்து விட்டோம் என்று அறிவித்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் இலங்கையைப் போன்று பல நாடுகள் நிதி வங்குரோத்து நிலையடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, கானா, கென்யா, லெபனான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாண்டு காலமாக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்தால் கடன் வழங்குநர்களுக்கு குறிப்பிட்ட கடன் தொகைளை செலுத்த வேண்டும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படும். ஆகவே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை அரசாங்கம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கும் என்றார்.

No comments:

Post a Comment