இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டுக்கு பின் நடத்தவும் : பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ள கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 18, 2024

இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டுக்கு பின் நடத்தவும் : பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ள கல்வி அமைச்சர்

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகளை தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

அது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலையையும் கவனத்திற் கொள்ளாது பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடரும் என்பதால், அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அமைச்சர் வலியுத்தியுள்ளார்.

அதேவேளை, நேற்று நாட்டின் பல பகுதிகளில் வெப்பமானது எச்சரிக்கை மட்டத்தில் காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 39 – 45 செல்சியஸ் வரை வெப்பநிலை நீடிக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை நாட்டின் சில பிரதேசங்களில் இன்று குறிப்பிடத்தக்களவு உஷ்ண நிலை அதிகமாகக் காணப்படுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

போதியளவு நீரை அருந்துதல், முடிந்தளவு நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, வெளியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்ைககளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவேண்டுமென்றும் அந்தத் திணைக்களம் கேட்டுக்ெகாண்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment