சகல பாடசாலைகளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர தீர்மானம் : தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, March 14, 2024

சகல பாடசாலைகளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர தீர்மானம் : தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த

மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான பாடசாலைகளாக சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மறுசீரமைப்பு கொள்கை வரைவில் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளை ஒரே விதமாக கொண்டு வருவது தொடர்பில் யோசனைகள் காணப்படுகின்றன. 

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான தெரிவுக்குழுவில் இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. இதனை ஒரே தடவையில் மேற்கொள்வது கடினம். எனினும், படிப்படியாக கட்டம், கட்டமாக இதனை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் போது, கற்பிக்க முடியாது என்று எவரும் கூறமுடியாது. அவ்வாறு தெரிவித்தால் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை அடைய முடியாது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான அறிவைப் பெருக்கும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அனைத்து கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

பல்வேறு நாடுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கல்வி மறுசீரமைப்பின் மூலம் காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறானால் அமைச்சர் மாறினாலும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment