இல்லை, இயலாது, பார்ப்போம் என்கின்ற தலைவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2024

இல்லை, இயலாது, பார்ப்போம் என்கின்ற தலைவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை - சஜித் பிரேமதாச

இந்நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக மாற்றும் திருத்தத்திற்கு எதிராக சில முட்டாள்த்தன புரட்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இலவசக் கல்வியை நவீனமயப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. புதிதாக ஏதாவது செய்ய முற்படும்போது வீதியில் இறங்குகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறு புரட்சி செய்தாலும் அவர்களின் பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளிலும் தனியார் பல்கலைகழகங்களிலும் கல்வி பயில்கிறார்கள். இந்நாட்டில் உள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது போகின்றது. கல்வியில் இந்த பிரிவினை களையப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 112 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குளியாபிட்டிய, கிதலவ, புக்கல மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (29) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பற்றாக்குறையாக இருந்த வந்த பாடசாலையின் நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கி வைத்தார்.

“இல்லை, இயலாது, பார்ப்போம்” என்று பதில் சொல்லும் தலைவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை. எந்தவொரு சவாலுக்கும் தீர்வு காணக்கூடிய தலைவர்களே தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தப் பயணத்தின் ஒரே நோக்கம் கிராமத்துக்கும், நகரத்துக்கும் நாட்டுக்கும், பாடசாலைக்கும், பெறுமதி சேர்ப்பதே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இலங்கை, பசுமை இலங்கையை உருவாக்குகிறோம் என்று அரசும், ஆட்சியாளர்களும் கூறினாலும், இதற்கான நடைமுறை திட்டம் அவர்களிடம் இல்லை. இது குறித்த நேர்மையான சிந்தனைகள் அவர்களிடம் இருந்தால் கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அழுத்தங்களுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர். இவ்வாறான நிலையில் பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதற்குப் பதிலாக பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும்.

ஆனால் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தைச் சுருக்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது 220 இலட்சம் பேர் மீதும் அழுத்தத்தைச் சுமத்தி மக்களின் நிம்மதியை கெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் ஆட்சியாளர்கள் நுண் பொருளாதாரம் குறித்து பேசும்போது, ​​பணவீக்கமும் ஒரு அம்சம் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும் பல காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதில் கவனம் செலுத்துவதால் கருவில் இருக்கும் குழந்தை, கர்ப்பிணித் தாய், இளைஞர்கள் பிள்ளைகள் மற்றும் குடிமக்கள் என சகலரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களை முன் நிறுத்திய அனைவருக்கும் நன்மையளிக்கும் பொருளாதார வளர்ச்சியை நோக்கியும், அனைவருக்கும் பயனளிக்கும் மனிதாபிமான பொருளாதார முறைமையை நோக்கியும் நாம் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment