ஹரிஹரன் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்குரிய பணம் மீளளிப்பு : குழப்பங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள Northern Uni - News View

About Us

About Us

Breaking

Thursday, February 15, 2024

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்குரிய பணம் மீளளிப்பு : குழப்பங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள Northern Uni

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவுச்சீட்டு மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக Northern Uni தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பட்டப்படிப்பின் பின்னரான தொழில் வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே எமது நிறுவனம் ஆகும். அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம்.

முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்புகொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கெட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர்.

இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும்போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 90 வீதமான ஆசனங்கள் இலவசமாக எமது கல்வி சார் உத்தியோகத்தர்கள், எமது மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக இருக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இவ் டிக்கட்டுக்கள் விற்பனை மூலம் கிடைக்கப் பெறும் நிதியை யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES) வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

இவ் நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

நிகழ்வானது நாம் எதிர்பார்த்தவாறு மாலை 6.00 மணிக்கு எமது உள்நாட்டு கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமானது. 

6:25 மணிக்கு, தமிழா தமிழா நாளை நம் நாடே எனும் பாடலைப் பாடி ஹரிஹரன் மக்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். 

9:10 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வேண்டுமென ஏற்படுத்தி நிகழ்வினை இடைநிறுத்தும் நோக்கில் உள்நுழைந்த விசமிகளால் சுமார் 15 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.

எனினும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நிலைமையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஆரம்பித்து நாம் திட்டமிட்டவாறு அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு 12 மணியளவில் நிகழ்வானது நிறைவு பெற்றது.

இதன்படி 4 மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்வு இறுதியில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கு 46,055 மக்கள் பதிவு செய்திருந்த போதிலும், பல எதிர்ப்புக்கள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும் மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பதற்கிணங்க நிகழ்வின் அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்திருந்ததே எமக்கும் வருகை தந்த கலைஞர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகும்.

எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப் பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன். 

தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.

எனினும் எம்மவர்களில் பலர் எமது மண்ணின் முன்னேற்றத்திற்காக பல செயற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளனர்.

அவர்களுடன் இணைந்து எவ்வாறான தடைகள் ஏற்படினும் நானும் எனது நிறுவனமும் எப்பொழுதும் எனது மக்களின் நலனுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் பணிபுரிவோம் என உறுதியளிக்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர

No comments:

Post a Comment