விடுதலையான சாந்தன் இரண்டு நாட்களில் இலங்கை வருவார் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 25, 2024

விடுதலையான சாந்தன் இரண்டு நாட்களில் இலங்கை வருவார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கருணை மனு அடிப்படையில் விடுதலையாகியுள்ள சாந்தன் விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாரென, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

இலங்கை செல்வதற்கான அனுமதியை சாந்தனுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், விமான டிக்கெட்டை அவரது சொந்த செலவிலேயே எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபா்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 07 பேரையும் விடுவிக்க கடந்த 2022 நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்திய குடியுரிமையை கொண்டுள்ளதால் அவர்களின் இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

ஏனைய 04 பேர் இலங்கை குடியுரிமையை கொண்டுள்ளதால், வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்திலிருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 04 பேர் தொடர்பான விபரங்களை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியதாகவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். 

சாந்தன் தனது தாயாருடன் இலங்கையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, சாந்தன் மட்டும் இலங்கை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

தற்போது சுகயீனம் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையிலுள்ள சாந்தன், சிகிச்சையை முடித்துக் கொண்டு, பயணச்சீட்டு, கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டு 02 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

(திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது)

No comments:

Post a Comment