யாழில் இசை நிகழ்ச்சியில் குழப்பம் : 6 பேர் கைது : வைத்தியசாலையில் 3 பேர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 10, 2024

யாழில் இசை நிகழ்ச்சியில் குழப்பம் : 6 பேர் கைது : வைத்தியசாலையில் 3 பேர்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அசம்பாவிதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, இலவசமாக இசை நிகழ்வை கண்டுகளித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்து, கட்டண அனுமதி பெற்று, இசை நிகழ்வை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மக்கள் வலயத்தினுள் நுழைந்து, மேடை வரை சென்றனர்.

அத்துடன், கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்த உயரமான மேடைகள், ஒலி அமைப்பு செய்யப்பட்டிருந்த மேடைகள், பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி ஆரவாரம் செய்தனர்.

கட்டுக்கடங்காமல் போன ரசிகர்கள் கூட்டத்தால் கதிரைகள், தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டன.

இதனால் இசை நிகழ்வு சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார், விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் மேலதிகமாக மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர், இசை நிகழ்வு மீள ஆரம்பிக்கப்பட்டு, சில மணி நேரங்களில் அவசர அவசரமாக நிறைவு செய்யப்பட்டது.

நேற்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment