அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் : இலங்கையில் அரசியல் அனுபவம் திறமைகள் உள்ள ஒரே தலைவர் ரணில் - அகிலவிராஜ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் : இலங்கையில் அரசியல் அனுபவம் திறமைகள் உள்ள ஒரே தலைவர் ரணில் - அகிலவிராஜ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

இனவாத, மதவாதத்தை தூண்டிக்கொண்டு மக்களின் மன நிலையையை மாற்றி அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (16) இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 1977 இல் இந்த நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும்போது, இந்த நாட்டுக்கு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, நாட்டின் இளைஞர் சமூகத்துக்கு உலகத்தை காட்டி, பொருளாதார இலக்காென்றை சமர்ப்பித்தது ஐக்கிய தேசிய கட்சியாகும்.

2001 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மறை பெருமானத்தில் இருக்கும்போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு விமான நிலையங்கள் செயலிழந்திருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நேர் பெறுமானத்துக்கு கொண்டுவரும்போது, நாட்டுப்பற்றாளர்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் குழு அந்த அரசாங்கத்தை வீழ்த்த நடவடிக்கை எடுத்தது.

அத்துடன் 2014 இல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது.? நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து மறை பெறுமானத்துக்கு செல்லும்போது, அதில் இருந்து தப்பிக் கொள்ளவே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன் மீண்டும் போராட்டங்கள் இ்டம்பெறுவதும் அன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மேற்கொண்ட நடவடிக்கையே தற்போதும் ஆரம்பிக்கப்படுகிறது. மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களை இறுதி வரை கொண்டுசெல்ல முடிந்திருந்தால், இன்று நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது. என்றாலும் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எமக்கு இடமளிக்கவில்லை.

இனவாத, மதவாதத்தை தூண்டிக் கொண்டு மக்களின் மன நிலையையை மாற்றி அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர்.

தேர்தலில் நாங்கள் தாேல்வியுற்றாலும் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எமது கொள்கையில் மாற்றம் இல்லை அவ்வாறு கொள்கையை மதிக்கின்ற தலைவர் ஒருவருர் இருக்கின்ற கட்சி என்ற வகையில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

அத்துடன் கற்பனை கதை சொல்லும் அரசியல்வாதிகள் பலரும் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் யாரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை. இன்று அரசியல் பிரச்சினை இல்லை. பொருளாதார பிரச்சினையே இருக்கிறது. அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான அளவு தலைவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமாக இருப்பது உலக நாடுகள் தொடர்பாக அறிவு, அரசியல் அனுபவத்துடன் பொருளாதார சிந்தனை உள்ள தலைவருக்காகும். அந்த அனைத்து தகுதியும் உள்ள தலைவரே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

இலங்கையில் அரசியல் அனுபவம் திறமைகள் உள்ள ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர தெரிந்தளவில் வேறு யாரும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவே எமது இறுதி மாற்றுவழி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே தொடர்ந்தும் நிவாரண வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால், நிவாரணங்களை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதனை எவ்வாறு வழங்குவது என தெரிவிப்பதில்லை. அதனால் கற்பனை கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் உண்மை நிலையை தெரிவித்தே ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதனால் பொய் வாக்குறுதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி மனிதநேய கட்சியாகும். அதனால் மக்களின் பிரச்சினைக்கு உண்மையாக தீர்வுகாண முடியுமான கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும். அதனால் இந்த நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும். அவருக்கு ஆதரவளிக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment