(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது. அதனால் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து சனசமூக நிலையத்தை அந்த பிரதேச மக்கள் பயன்படுத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலவவர் சஜித் பிரேமதாச கோரிக்கை வடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு 10, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அலவி மெளலானா சனசமூக நிலையம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் பலவந்தமாக ஆக்கிரிமிக்கப்பட்டிருக்கிறது.
சனசமூக நிலையம் பொதுமக்களின் நலனோம்புகளுக்காக பயன்படுத்தப்படும் கட்டிடம் என்பது யாரும் அறிந்த விடயம். இந்த கட்டிடம் மாகாண சபைக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத்துக்கு கீழே இருந்து வருகிறது.
கொழும்பு மாநகர சபைக்கு கீழ் இருந்துவரும் அலவிமெளலானா சனசமூக நிலையம் அமைந்துள்ள பூமி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ்வின் தலையீட்டினால் மதில், நுழைவாயில் அமைத்து அதனை பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த சனசமூக நிலையம் அந்த பிரதேசத்தில் வருமானம் குறைந்த மக்களின் விழாக்களுக்காக குறைந்த கட்டணத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலைய பூமி பிரதேசம் முன்னாள் மாநகர சபை உறுப்பினரின் தலையீட்டினால் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக மாநகர ஆணையாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளபோதும் அதற்கு கித்சிறி ராஜபக்ஷ் தலையீடு செய்துள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாக இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
எனவே அலவி மெளலானா சனசமூக நிலையத்தை யாருக்கும் ஆக்கிரமிக்க இடமளிக்காமல் வசதி குறைந்த அந்த பிரதேச மக்களின் நலனோம்புகளுக்காக மீண்டும் பயன்படுத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment