நாட்டிலுள்ள ஆறுமுதல் ஒன்பது மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் இத்தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக பிரதம விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகிலுள்ள சகல நாடுகளிலும் தற்போது தட்டம்மை நோய் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் காலத்தில் சிறுவர் தடுப்பூசித் திட்டம் சரியாக செலுத்தப்படவில்லை. இதனால், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உலகிலுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட 25 மில்லியன் சிறுவர்களுக்கு தடுப்பூசியை பெற முடியாமற்போனது.
இதனால் இவர்கள் எதிர்காலத்தில் சின்னமுத்து போன்ற தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டே சிறுவர்களுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
இந்நோயாளர் சுமார் 16 பேருக்கு இந்நோயை கடத்தக்கூடிய அபாயம் உள்ளது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் சின்னமுத்து ஒரு பெரிய தொற்றுநோயாக பரவி வருகிறது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி, முதல் சின்னமுத்து நோயாளி நாட்டில் அதடையாளம் காணப்பட்டிருந்தார்.
சிறு வயது தடுப்பூசிகளை முறையாகப் பெறாதவர்களே இந்நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள 740 சின்னமுத்து நோயாளர்களில் 49% கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகூடிய நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment