ஜனாதிபதிக்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் : பலவீனமான தலைமைத்துவத்தினாலேயே சுகாதார சேவை முடக்கம் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

ஜனாதிபதிக்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் : பலவீனமான தலைமைத்துவத்தினாலேயே சுகாதார சேவை முடக்கம் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும்போது நிதி இல்லை என அரசாங்கம் கூறுகின்ற சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் ரூபா மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்படுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67 ஆவது கட்டமாக, கலாவௌ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கூலித் தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை திருடிக்கொள்ளும் அரசாங்கமே தற்போது காணப்படுகிறது. சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நோயாளர்களுக்கு தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது நிதி இல்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்படுத்துள்ளது.

சுகாதார சேவையே தற்போது நாட்டுக்கு அத்தியாவசிய தேவையாகக் காணப்படுகின்ற போதிலும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான 2000 இலட்சம் ரூபாவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு போதாது என்று கூறுகின்றனரோ, அவ்வாறே நோயாளர்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் போதாது. பலவீனமான தலைமைத்துவத்தினாலேயே சுகாதார சேவை முடங்கியுள்ளது என்பது தெளிவாக புலப்படுகிறது.

சுகாதார சேவை முழுமையாக முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டு தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை. பாடசாலைகளுக்கு கணினி மற்றும் நவீன வகுப்பறை போன்றவற்றை வழங்க முடியாவிட்டாலும், ஜனாதிபதியின் இவ்வாறான விநோதங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அறுவை சிகிச்சைக்காக வரிசையில் காத்திருப்பவர்களுக்கும் கூட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகமே காரணமாகும்.

தொழிற்சங்கத்துறையில் உள்ளவர்களை குற்றம் சாட்டுவதை விடுத்து, வெளிநாட்டு பயணங்களை விட சுகாதாரத்துறை குறித்து சிந்தித்து செயலாற்றுவதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment