(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலில் மூன்று இலட்சம் வாக்குகளைக்கூட பெறாத ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குளை பெறுவதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது. பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் நிலையில் இருந்து நாட்டு மக்கள் முதலில் விடுபட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சம்பள அதிகரிப்பை கோரி சுகாதார சேவையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு குறிப்பிட முடியாது.
வங்குரோத்து நிலையை தொடர்ந்து வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்தியர்களுக்கான கேள்வி அதிகளவில் உள்ளதால் வைத்தியர்கள் அந்த நாடுகளுக்கு செல்கிறார்கள்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தீவிரமடைந்தால் சுகாதாரத்துறை மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் வைத்தியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது.
ஆகவே பொருளாதார நெருக்கடிகளுகளுக்கு மத்தியில் தமது தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளுவற்கு முயற்சிப்பதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தொழிற்சங்கத்தினரை தவறாக வழிநடத்துவதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 3 இலட்சம் வாக்குகளைக்கூட பெறாத ஐக்கிய தேசியக் கட்சி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெறுவதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் உளவியலை பரிசோதனை செய்ய வேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அரசாங்கத்தினால் களமிறக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் மிக குறைந்தளவிலான வாக்குகளை பெறுவார். இது இலங்கையின் சாதனை மாத்திரமல்ல, உலக சாதனையாகவும் கருதப்படும். ஒருவேளை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடிக்கலாம்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் உட்பட ஆளும் தரப்பினரது கருத்துக்கள் நகைப்புக்குரியது. கட்சியின் அடிப்படை கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாரைவார்த்து விட்டு கட்சியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment