மேலாடையின்றி 126 வெற்றுப் பொங்கல் பானைகளுடன் ஆர்ப்பாட்டம் : அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி மகஜரும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

மேலாடையின்றி 126 வெற்றுப் பொங்கல் பானைகளுடன் ஆர்ப்பாட்டம் : அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி மகஜரும் கையளிப்பு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக அனுஷ்டித்து ஆர்ப்பாட்டமொன்றை காந்திப் பூங்காவில் முன்னெடுத்தனர்.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் மயிலத்தமடு பெரிய மாதவனை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை கோரிய பண்ணையாளர்களின் போராட்டமானது கடந்த 126 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த காலங்களில் மேற்படி மேய்ச்சல் தரையில் கோலாகலமாகவும் பக்தியாகவும் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பட்டிப் பொங்கல் நிகழ்வினை பண்ணையாளர்கள் முன்னெடுத்து வந்தனர்.

இம்முறை அங்கு அத்துமீறிய விவசாயத்தில் ஈடுபவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு இழைக்கும் அநியாயங்களை எதிர்த்து பட்டிப் பொங்கலைப் புறக்கணித்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

“பச்சைத் தரை எங்கும் இரத்தக் கறை” என்ற மகுடவாசகத்துடன் பண்ணையாளர்கள் மேலாடையின்றி 126 வெற்றுப் பொங்கல் பானைகள் சகிதம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம், காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பின்னர் பண்ணையாளர்களினால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அரசாங்க அதிபர் புதிதாக நியமனம் பெற்றவர் என்ற ரீதியில் அவர் மேற்படி விடயங்களை கவனத்திற் கொள்வதாக தெரிவித்த வாக்குறுதிக்கு அமைவாக குறித்த ஆர்ப்பாட்டம் நிறைவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment