இவ்வருடம் ஆரம்பமாகியது முதல் 15 நாட்களில் 101,362 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) நேற்று வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு 114 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் மொத்தமாக 102,545 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.
அதன்படி, சுற்றுலா பயணிகளின் வாராந்த வருகை சராசரியாக 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,700 ஆகவும் உள்ளது.
"கடந்த இரண்டு வருடங்கள் சவாலானதாக இருந்த நிலையில், இலங்கை சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நாங்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இதேவேளை, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த செயல்திறன் அதிகரிப்பு தொழில்துறைக்கு நல்லதொரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் ஜனவரி மாதத்தில் இதுவரை 16 சதவீதமான சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ரஷ்யா முதலிடத்திலுள்ளது.
ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் 15 சதவீத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
8 சதவீதமான சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் இடத்திலுள்ளது.
மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment