பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 8, 2023

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. பொலிஸ் சீறுடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன பெனிபிட்டிய முன்வைத்த கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாதாள குழுவின் செயற்பாடுகளையும், போதைப் பொருள் வியாபாரத்தையும் இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. இருப்பினும் பாதாள குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பெறுபேற்றை வெகுவிரைவில் அறிந்துகொள்ள முடியும்.

சிறைச்சாலைகளில் உள்ள நிலையில் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சருடன் கலந்துரையாடியுள்ளோம். போதைப் பொருள் ஒழிப்புக்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. சீறுடை அணிந்துள்ள பொலிஸார் தங்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொலிஸ் சேவைக்கு வரும்போது அவர்களுக்கு அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே பொலிஸாருக்கு என்று பாதுகாப்பு வழங்க விசேட செயற்திட்டம் ஏதும் வகுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment