ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான “ஷிட்சு” ரக செல்லப் பிராணியான நாய்க் குட்டியை திருடிச் சென்று, கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வீட்டுப் பணிப் பெண்ணை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஹாலியெல, உனகொல்லவத்த மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த சுபா என்ற ஞானசேகரம் சுபாஷினி என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட, மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த பேபலா இருகல்பண்டார, மிரிஹான தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம். பிரதான பொலிஸ் பரிசோதகர் இது தொடர்பான வழக்கை பதிவு செய்துள்ளார்.
வீட்டில் வளர்க்கப்பட்ட Shih Tzu இனத்தைச் சேர்ந்த நாய்க் குட்டியை திருடியமை, கடத்திச் சென்றமை, ஹாலிஎல பகுதியில் வீசி எறிந்தமை, அதனை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இப்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நுகேகொட பதில் நீதவான் திருமதி சுனிதா நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அடையாள அணிவகுப்பிலும் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பணிப் பெண், நாயைத் திருடியதாகக் கூறப்படும் பஸ் சாரதியால் அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பெண், முறைப்பாட்டாளரின் சகோதரியின் வீட்டில் பணிபுரிந்து, கடந்த ஏப்ரல் 13 இல், சகோதரிக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக முறைப்பாட்டாளருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் வீடு திரும்பியபோது குற்றம் சாட்டப்பட்ட பணிப் பெண் வீட்டில் இருக்கவில்லை. வளர்ப்பு நாயும் வீட்டில் இல்லாதிருந்தது. வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய பணிப் பெண் ஒரு பெரிய பையுடன் வீட்டை விட்டு வெளியே செல்வது பதிவாகியுள்ளது.
பஸ் நிறுத்தத்திற்கு வந்த அவர், ஹாலிஎல செல்லும் பஸ்ஸில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் பஸ்ஸில் ஏறி நாய்க் குட்டியுடன் தனது பஸ்ஸில் பயணித்ததாக பஸ்ஸின் சாரதி சாட்சியமளித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை, அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட பஸ் சாரதி அடையாளம் காட்டி சாட்சியமளித்தார்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பெண் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். உண்மைகளை பரிசீலித்த பதில் நீதவான் திருமதி சுனிதா நாணயக்கார, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment