மாணவர்களின் பெற்றோரிடமிருந்து மின் கட்டணம் செலுத்தப்படுகிறது : வரையறுத்துள்ளதால் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று குறிப்பிட முடியாது - ஹரிணி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, November 24, 2023

மாணவர்களின் பெற்றோரிடமிருந்து மின் கட்டணம் செலுத்தப்படுகிறது : வரையறுத்துள்ளதால் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று குறிப்பிட முடியாது - ஹரிணி அமரசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் நுகர்வுக்கான கேள்வி சடுதியாக குறைவடைந்துள்ளதால் எரிபொருளுக்கான வரிசை குறைவடைந்துள்ளது. மக்கள் தமது தேவைகளை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். இதனை பிரச்சனைகளுக்கு தீர்வு என்று குறிப்பிட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, எரிபொருள், மின்சாரம் ஆகிய துறைகள் மக்களின் அன்றாட செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது. ஆகவே இவ்விரு துறைகளும் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மின் கட்டண அதிகரிப்பே மின் விநியோக நெருக்கடிக்கு தீர்வு என்று அரசாங்கம் குறிப்பிட்டு பலமுறை மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பால் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 05 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களுக்கான மின் பாவனை துண்டிக்கப்பட்டுள்ளது. 30 அலகுக்கும் குறைவான மின்னலகை பாவிக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கான மின் பாவனையே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பால் ஒட்டு மொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் தமது மின் பாவனையை 30 மின்னலகுக்குள்ளும், உயர்மட்டத்தில் மின் பாவனையை பாவித்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் தமது மின்பாவனையை 30-60 வரையான அலகுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறம் பாடசாலை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடப்பட்டு மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனை எவ்வாறு மின் விநியோக நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று குறிப்பிடுவது.

எரிபொருள் நுகர்வுக்கான கேள்வி சடுதியாக குறைவடைந்துள்ளதால் எரிபொருளுக்கான வரிசை குறைவடைந்துள்ளது. மக்கள் தமது தேவைகளை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். இதனை பிரச்சினைகளுக்கு தீர்வு என்று குறிப்பிட முடியாது என்றார்.

No comments:

Post a Comment