நீர் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையை ஜனவரியில் வெளியிடுவோம் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 8, 2023

நீர் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையை ஜனவரியில் வெளியிடுவோம் - ஜீவன் தொண்டமான்

(எம்.ஆர்,எம், வசீம், இராஜதுரை ஹஷான்)

விவசாயத்திற்கான நீர் தொடர்பில் முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்கான குடிநீர் விடயங்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும். அத்துடன் நீர் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) விஜித ஹேரத் எம்.பி. நீர் கட்டணம் மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பில் பிரதமரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீர் கட்டணம் மற்றும் நீர் விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் ஆளும் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அல்ல.

எவ்வாறெனினும் வீட்டு நீர் வழங்கல் பிரிவு தொடர்பிலேயே நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். நீர் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன் விவசாயத்திற்கான நீரை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வோட்டர் மார்க்கெட் திட்டம் என்பது ஒரு நீண்டகால திட்டம். அது தொடர்பில் நாம் இன்னும் சிந்திக்கவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. விஜித ஹேரத் எம்பி தெரிவிப்பதுபோல் அது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவும் இல்லை.

எதிர்காலத்தில் நீர் பாவனையை சிக்கனப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பிலேயே தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment