அரச, தனியார் மற்றும் தோட்டத் துறையைச் சேர்ந்தோரின் சம்பளத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை இரண்டு மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் எடுத்திருந்ததாக தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இதுபற்றி முன்னரே அறிந்துகொண்டவர்களே, ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிரிப்பு கோரி, இப்போது ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்தும் ‘கரு சரு’ வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான செயல் அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு (01) அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவுக்கமைய இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் கீழ் முறைசாரா பிரிவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சேவைத்தரம் மற்றும் அங்கீகரிப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொளவதே ‘கரு சரு’ வேலைத்திட்டமாகும்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர், சம்பள அதிகரிப்பு விடயத்தில் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தொழில் ஆலோசனை சபையின் உடன்பாட்டுடன் இது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவையில் முன்வைத்தோம்.
இந்த அதிகரிப்பை பட்ஜட்டில் மேற்கொள்வோமென ஜனாதிபதி ஆலோசனை கூறினார். இதற்கிடையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்த கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. எனினும், தேவையானதை செய்து தருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
சிலரின் அறியாமை, அனுபவமின்மையால் நாட்டின் அரச வருமானம் விழ்ச்சி கண்டது. ஆனால் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி மீண்டும் வரிகளை உயர்த்தியுள்ளார். இதற்கமைவாக, கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரி அறவிடப்படுகிறது.
ஆனால், இது உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைந்த தொகையாகும். இதை நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம் அதிகரிப்பு இடம்பெறப்போவதாக தெரிந்ததால், சம்பள உயர்வுக்காக இவர்கள் போலியாக போராட்டம் நடத்தினர்.
சம்பள அதிகரிப்பை நாமே செய்தோம் என்று சொல்லி மேலும் பலரை தம்முடன் இணைத்துக் கொண்டு அதிகாரத்துக்காக இவர்கள் காத்திருக்கின்றனர். இதனால்தான், அரச ஊழியர்களை வீண் சிரமங்களுக்கு உள்ளாக்காது நாமே உரிய நேரத்தில் சம்பள அதிகரிப்பை அவர்களிடம் கூறவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment