(நா.தனுஜா)
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ள சேவைக்கால நீடிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகள் கூட்டிணைவு, பொலிஸார் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வகையில் உரிய காலப்பகுதியில் அப்பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் உண்டு என தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நான்காவது தடவையாக சேவைக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜெப்ரி அழகரத்னம், சாலிய பீரிஸ், உபுல் குமார பெரும உள்ளிட்ட மேலும் பலர் அடங்கிய சட்டத்தரணிகள் கூட்டிணைவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அரசியலமைப்பின் பிரகாரம், பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதில் நிலவும் தோல்வி மற்றும் அதன் விளைவாக பொலிஸ் திணைக்களத்திலும் குற்றவியல் நீதி கட்டமைப்பிலும் ஏற்படக்கூடிய மிதமிஞ்சிய தாக்கம் என்பன தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன கட்டாய ஓய்வுக்குரிய வயதெல்லையை கடந்திருக்கின்ற போதிலும் கடந்த 8 மாத காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவரது பதவி சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன் மீட்சியாக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின்றி கடந்த வெள்ளிக்கிழமை (3) ஜனாதிபதியினால் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை கடந்த சில தசாப்த காலமாக தலைமைத்துவத்தில் நிலவிய குறைப்பாடுகள் பொலிஸார் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
அதுமாத்திரமன்றி சுயாதீனத்துவமின்மை, அரசியல் மயமாக்கம், சந்தேக நபர்களை சித்திரவதைக்குட்படுத்தல், பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் மற்றும் உரியவாறான தொழில் முறை செயற்பாடின்மை என்பனவும் இந்த நம்பிக்கை இழப்புக்கு வழிகோலின.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும்.
அரசியலமைப்பின் 41(சி) பிரிவின்படி பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பொருத்தமான நபர் ஒருவரை பரிந்துரைப்பதுடன் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெற்றதன் பின்னர் மாத்திரம் அவரை அப்பதவிக்கு நியமிக்கின்ற பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு.
அதேவேளை குறித்த பதவிக்கு நியமிக்கப்படும் நபர் அதற்கு பொறுத்தமானவர் என்பதையும் அதற்கான தகுதி மற்றும் சிறப்பான சேவை வழங்கல் என்பவற்றை கொண்டிருப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உண்டு.
அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள மீயுயர் தராதரம் மற்றும் சிறந்த ஆட்சி நிர்வாகம் என்பன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பொலிஸ்மா அதிபர் தெரிவு செயன்முறையின்போது உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவூட்டுகிறோம்.
அடிப்படை உரிமைகளை மீறியதாகவோ அல்லது சட்டவிரோத குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ கண்டறியப்பட்டவர்களும் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் அல்லது சித்திரவதை, சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் உள்ளடங்கலாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமக்குரிய கடமைகளில் இருந்து விலகிச் செயற்பட்டவர்களும் இப்பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment