(இராஜதுரை ஹஷான்)
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். குண்டுத் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதை விடுத்து அரசியல் நோக்கத்துக்காக நான் இலக்கு வைக்கப்படுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
பொலன்னறுவை பகுதியில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை முன்வைத்துள்ளது.10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பயணத்தில் நான் முறையற்ற வகையில் சொத்து சேர்க்கவில்லை. நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன் ரூபா செலுத்தியுள்ளேன். மிகுதி தொகையை செலுத்த காலவகாசம் கோரியுள்ளேன்.
டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் எனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த விபரங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். மறைக்கும் அளவுக்கு பெருமளவான சொத்துக்கள் என்னிடம் இல்லை.
குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கு அறிவுறுத்தில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்த தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் வினைத்திறனான வகையில் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நான் இலக்குப்படுத்தப்படுகிறேன். நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் என்றார்.
No comments:
Post a Comment