வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்ட எனக்கு கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும் : எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என்கிறார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 14, 2023

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்ட எனக்கு கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும் : எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என்கிறார் ஜனாதிபதி

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே தான் நெருங்கிவிட்டதாகவும், அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும். எப்பொழுதும் மக்களுக்கு உண்மையைச் சொல்லும் கட்சியாக இருப்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் ரீதியான பின்னடைவுகளைச் சந்திக்கிறது. இருப்பினும், மக்களுக்கு உண்மையைச் சொல்வதே ஐக்கிய தேசிய கட்சியின் பலமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகளும் போட்டியிடும். இருப்பினும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தனது முதல் கடமையாகும் எனவும் அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.

வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment