கல்விக்காக 465 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் - சுரேன் ராகவன் - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

கல்விக்காக 465 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர் - சுரேன் ராகவன்

2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர் கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அடுத்த வருட இறுதிக்குள், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”இலங்கையில் முதன்முறையாக நுண்கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் உரிய இலக்குகளை அடைய எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்தின் ஊடாக கலைப் பட்டதை மேலும் வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.

21 ஆவது நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டிலிருக்கும் நாம் உயர் கல்விக்கான தேசிய ஆணைக்குழு அல்லது அதிகார சபையொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதனூடாக பல்வேறு பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒரு இடத்திலிருந்து செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் பிரஜைகளை வலுவூட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பெறும் மாணவர்களுக்கு அரசாங்கம் முதலீடு செய்யும் முழுத் தொகையையும் நேரடியாக புலைமைப்பரிசில் அடிப்படையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால் எந்தவொரு மாணவரும் தனக்கு விருப்பமான பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தெரிவுக்கமைய இந்நாட்டு அரச பல்கலைக்கழங்களுக்குள் தீர்மானமிக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் 2024 ஆம் ஆண்டில் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்படிருப்பதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் உயர் கல்விக்காக மேலும் 210 பில்லியன்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக கட்டமைப்புக்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் அடுத்த வருட இறுதிக்குள், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்க முடியுமென்பது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வம்சாவளி பேராசிரியர்களை இந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment